Tuesday, April 04, 2006

பிரதமர் ஏன் ஓட்டு போடவில்லை?


இந்தக் கேள்வியைக் கேட்க ஜனநாயக இந்தியாவின் ஒரு அடிப்படை குடிமகன் என்ற முறையில் எனக்கு உரிமை உண்டு.

அஸ்ஸாம் மாநிலத்தில் திஸ்பூர் தொகுதியில் நடந்த வாக்குப் பதிவில் பிரதமர் மன்மோகன்சிங், வாக்குச் சீட்டில் தன் பெயர் இருந்தும் வாக்களிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டிருக்கிறது தினமணி

இந்த செய்தியினை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் பிரதமர் தன் அடிப்படை ஜனநாயகக் கடமையாற்றத் தவறிவிட்டார் என்றே கூறலாம்.

இந்த செயலை நியாயப்படுத்தக் கூறப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச் சதவிகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம். நமக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் போதும். நாம் ஓட்டுப் போடவில்லை என்றால் நமக்கு என்ன நஷ்டம் யார் கேட்கப் போகிறார்கள் (இன்னும் பல காரணங்கள் உண்டு). பிரதமரே ஓட்டுப் போடவில்லை என்று நம்மில் சில பேர் நினைக்க பிரதமரே உதாரணமாக இருக்கலாமா?

வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை என்ற ஏக்கமும் வருத்தமும் ஒருபுறம் இருந்தாலும், வாக்களிக்கும் தகுதியில் உள்ளவர்கள் வாக்களிக்கவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

அய்யா பிரதமர் அவர்களே,

நல்லுதாரணமாய் இருக்க வேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா?.

தங்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கும் ஒரு குடிமகனின் கேள்வி இது

படம் உதவி தினமலர்

Monday, April 03, 2006

மானம் காத்த தமிழர்கள்













கைப்புண்ணுக்கு கண்ணாடி(கமெண்ட்) தேவையா??

படம் நன்றி தமிழ்முரசு

Monday, March 27, 2006

அன்னை தேசத்து அகதிகள் நாம்

சமீபத்தில் எனக்கு மெயிலில் வந்த கண்ணீர்க் கவிதை. மனதை என்னவோ போல் செய்தது.
அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணை தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகி விட்டது!
ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்று விடுகிறது
நம் பெரு நாட்கள் ஒவ்வொன்றும்...

உயிரைப் பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்க்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போலத்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்த்தைகள்...

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது...

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக்கற்று தந்த சுகம் கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்தப் பாலைப் பிரதேசங்களில்?...

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்
போதுமறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறதுமனசைத் தவிர...

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக...

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும் விரகத்தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?


உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்! -- (இது சோகத்தின் உச்சம் அல்லவா. இந்த வார்த்தைகளுக்கு கரையாத மனமும் கரையாதா?. இந்தக் கவிதையை எழுதியவருக்கு யார் ஒத்தடம் கொடுப்பது?)
கவலைப் படாதீர்கள் நண்பரே. நல்லதே நடக்கும். நம்புங்கள் 'நாளை' உண்டு.

Tuesday, March 21, 2006

பட்டாசுன்னா வெடிச்சே ஆகணுமா என்ன?!


தீபாவளின்னா எல்லோருக்கும் ஞாபகம் வர்றது பட்டாசு தாங்க. புது ட்ரஸ் ரெண்டாவது தான்.

அதுவும் சின்ன வயசில தீபாவளின்னா ஒரே கொண்டாட்டம் தான் போங்க. ஒரு மாசம் முன்னாடியிருந்தே கொஞ்ச கொஞ்சமா காசு ( கடைக்கு அனுப்பினா கூலி இல்லாம போக மாட்டோம்) சேர்த்து தினமும் எண்ணிப் பார்த்து யாருக்கும் தெரியாம ஒளிச்சு வைக்கறது வழக்கம். பட்ஜெட் எல்லாம் கூட போடுவோம் ( என்ன பெரிசா ஒரு ஐம்பது ரூபா தான் வரும்.ஆனா டெய்லி எண்ணுவோம்) ஒரு வாரம் இருக்கும் போது பட்டாசு கடை பக்கமாய் சைடுல போய் நின்னு என்னென்ன பட்டாசு வாங்கலாம்னு மனசுக்குள்ள கணக்கு வேற. பிரண்ட்ஸ் கூட எல்லாம் டிஸ்கசன் செஞ்சு யார் யார் எவ்வளோ காசுக்கு பட்டாசு வாங்கறதுன்னு போட்டி.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னயே பட்டாசு வாங்கி வெயில்ல காய வைப்போம். (மழை வராம இருந்தா) கரெக்டா தீபாவளி நாள் மட்டும் எல்லாருக்கும் முன்னாடியே எழுந்து ( தூங்கினா தானே எந்திரிக்க) பர பரன்னு ஊதுவத்தியை தேடி, தீப்பெட்டி எடுத்து பத்த வச்சு மொத வெடி நம்ம தான் வெடிக்கனும்னு வெடிய எடுத்து தெருவுல வச்சு அதன் திரியில நெருப்ப பத்த வச்சு நெஞ்சு பட படன்னு காத்திருக்க, அந்த பாழாய்ப்போன பட்டாசு வெடிக்காம சதி செய்யும் போது வரும் பாருங்க கோவம்............சே ஏன்டா இந்த வெடிய நம்பி வாங்கனோம்னு தோணும் போது ஒரு ஞானம் உதயமாகும்.

இனி மேல இந்த பிராண்ட் வெடிய வாங்கவே கூடாதுன்னு. (ஆனா அடுத்த வருஷம் மறந்துடும்)
இதெல்லாம் இப்ப நெனச்சா கூட சிரிப்பா இருக்கு போங்க.


பின்குறிப்பு : தீபாவளி வெடிக்கும் மேல உள்ள படத்துக்கும் நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லீங்க)

Saturday, March 18, 2006

ரொம்ப நாளைக்கப்புறம்...

ரொம்ப நாளைப் போச்சுங்க இந்த பக்கம் வந்து...

ஏன்னா நான் கொரியாவுல இருந்து வந்துட்டன். என்னோட ப்ரொஜக்ட் அங்க முடிஞ்சு போச்சு. பிறகு இத்தாலிக்கு போடான்னுட்டாங்க. அதுக்கோசரம் விசா, டிக்கட் அது இதுன்னு அலைஞ்சி கடேசியா இத்தாலி வந்து சேர்ரதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு.

அதனால சும்மா கொஞ்சூண்டு இடைவெளி ஆயிப்போச்சு. இதுக்கு நடுவில என்னைக் காணாம நெறய நெறைய பேரு தவிச்சுப் போயிருப்பீங்க இல்லையா(நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதுங்கிறேன்). அவங்கெல்லாம் என்ன மன்னிச்சுருங்க. ( கேப்டன் எதோ சொல்ராப்ல இருக்கு)

என்னாதான் இருந்தாலும் உங்களயெல்லாம் பாக்காம பேசாம என்னவோ போல இருக்குதுங்க. சரி போகட்டும்.

அப்புற மேட்டு நாம மீட் பண்ணலாமா. உங்க கிட்ட நெறைய பேசனும்..

வுடு ஜூட்

பிகு : தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்

Thursday, February 02, 2006

முயற்சி திருவினையாக்கும்

ஒருவன் கோயிலுக்குச் சென்று தனக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு விழ வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் தன்னுடைய தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என்று வேண்டினான்.

அதுபோலவே மறுநாள் தொழிலில் நஷ்டம் அடைந்தான். மறுபடியும் கோயிலுக்குச் சென்று தனக்கு லாட்டரியில் பத்து லட்சம் பரிசு விழ வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் தன்னுடைய வீடு, சொத்து விற்று விட வேண்டி வரும் என்று வேண்டினான்.

சொன்னது போலவே சொத்தையெல்லாம் இழந்தான். திரும்பவும் கோயிலுக்குச் சென்று தனக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழ வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் தன்னுடைய மனைவி, மக்கள் அனைவரையும் இழக்க வேண்டி வரும் என்று வேண்டினான்.

அப்போது கடவுள் அவன் முன்னே தோன்றி " நீ முதலில் லாட்டரி சீட்டை வாங்கு" என்று கூறினார்.

சும்மா கடவுளை வேண்டினால் மட்டும் போதாது. 'லாட்டரி சீட்டை (முயற்சி) நாம் தான் வாங்க வேண்டும்.

Wednesday, February 01, 2006

இந்த டிவி என்ன விலை?

நம்ம கைப்புள்ளக்கு இந்த ஜோக் சமர்ப்பணம்

நம்ம சர்தார்ஜி(கைப்புள்ள இல்ல?) ஒரு கடைக்கு போனார்.

அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கடைக்கார பையனைக் கேட்டார்.

அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு 'கெட் அப்பை' மாத்தி அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜிக்கு ஆச்சரியம். எப்படி இவன் நம்மள கரெக்டா கண்டுபுடிச்சிட்டான்னு.
மறுபடியும் வெளியே போய் தன்னுடைய தாடி எல்லாம் ஷேவ் பண்ணி மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டு முழுசா ஆளே மாறி திரும்பவும் அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.

மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம் கோவம்.

ஆர்வம் தாங்க மாட்டாம அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.

அதற்கு அவன் " நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல, மைக்ரோவேவ் ஓவன்" அப்டின்னான்.




கவிதை வேண்டும்



இந்த படத்திற்கு பொருத்தமான ஒரு கவிதையை தட்டி விடுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் வாழ்க்கையில் 'ரிஸ்க்" எடுத்ததுண்டா?

நீங்கள் வாழ்க்கையில் 'ரிஸ்க்" எடுத்ததுண்டா?.

நான் பல நேரங்களில் குருட்டாம் போக்காக எடுப்பதுண்டு. சில சமயங்களில் வெற்றியும் பல சமயங்களில் தோல்வியும் அடைந்ததுண்டு.

ஆனாலும் இந்த வழக்கத்தை விடுவதாக எண்ணம் இல்லை. இதில் என்ன பிரச்சினை என்றால் என்னுடைய 'ரிஸ்க்' ல் மற்றவர்களையும் இணத்து விடுவது தான்.

இதோ சமீபத்தில் நான் எடுத்த 'ரிஸ்க்'

விட்டு விடுங்கள்
நான் நானாகவே இருந்துவிட்டு
போகிறேன்

பொய்யை உண்மையாகவும்
உண்மையை பொய்யாகவும்
பேசாத வரை

உள்ளேயும் வெளியேயும்
வேறு வேறாய்
எண்ணாத வரை

உள்ளே விகாரமாய்
வெளியே இனிமையாய்
நடக்காத வரை

மெய்யான வாழ்க்கையில்
போலியாக நடிக்காத வரை

ஏழையின் பசிக்கு
இரங்கிடும் உள்ளம்
இருக்கும் வரை

மைனாக்கள்
என் வீட்டில் கூடு
கட்ட இசையும் வரை

மழையில் நனையத்
தூண்டும் குழந்தை
உள்ளம் அழியாத வரை

என் கடிகாரம்
சுற்றுவது நிற்கும் வரையாவது

விட்டு விடுங்கள்
நான் நானாகவே இருந்துவிட்டு
போகிறேன்

பி.கு: குழந்தை பிறந்தவுடன் எழுந்து நடந்துவிடுவதில்லை. நான் குழந்தை.